அரசு பள்ளிக்குள் ஒழுகிய மழைநீர்

ஆனைமலையில் அரசு பள்ளிக்குள் ஒழுகிய மழைநீரால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2022-12-12 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலையில் அரசு பள்ளிக்குள் ஒழுகிய மழைநீரால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

அரசு பள்ளி

கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள முக்கோணம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சின்னப்பம்பாளையம், தாத்தூர், கிழவன் புதூர், வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம் போன்ற பகுதிகளில் இருந்து வந்து 800 மாணவர்கள் கல்வி பயின்று செல்கின்றனர்.

இந்த பள்ளியில் ஓடுகள் வேயப்பட்ட வகுப்பறைகளில் மேற்கூரை சேதம் அடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவது வாடிக்கையாக இருக்கிறது.

மழைநீர் ஒழுகுகிறது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஆனைமலை பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்த மழை காரணமாக மேற்கூரை வழியாக பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியது.

இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மழைநீர் ஒழுகி கிடந்த வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் உடனடியாக மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விஷ ஜந்துக்கள்

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் பள்ளியானது, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இன்று(நேற்று) பெய்த சிறிய மழைக்கு கூட தாக்குப்பிடிக்காமல், தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகி உள்ளது. மேலும் வளாகத்திலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மேற்கூரை ஓடுகளை சீரமைப்பதோடு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கிணறு உள்ள பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால், அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்