மழைநீர் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
மவுனகுருசாமி:- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தேங்காய் விலை வீழ்ச்சி
மதுசூதனன்:- தொடர்ந்து தேங்காய் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதனைத் தடுக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.கொப்பரையை அரசு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும்.
மேலும் உரக்கடைகளில் அதிக அளவில் ரசாயன உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. விலைப்பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட எதுவும் முறையாக கடைபிடிப்பதில்லை. அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனர். குறைதீர் கூட்டங்களில் கொடுக்கப்படும் பல மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பட்டா மாறுதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
மனைப்பட்டா
பரமசிவம்:- பல ஆண்டுகளாக நிலவும் ஜம்புக்கல் கரடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதுடன் அதனை வியாபார நோக்கத்தில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
பஞ்சலிங்கம்:- குமரலிங்கம் பகுதியில் 96 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும் இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லை.குடிமங்கலம் கொசவம்பாளையம் பகுதியில் 10 ஆண்டுகளாக வீட்டு மனைப்பட்டா கேட்டும் கிடைக்காத நிலை உள்ளது.எனவே தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் கிடைப்பதில்லை
ஸ்ரீதர்:- குடிமங்கலம் ஒன்றியத்தில் குளங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. விருகல்பட்டி, பூளவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. வியாழக்கிழமை இந்த பகுதிக்கு அருகில் சந்தை கூடுவதால் மக்கள் நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அந்த நாளில் இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும்.
அருணாச்சலம்:- காந்திநகர் கிழக்கு சரவணாநகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
நீரா.பெரியசாமி:- கொண்டம்பட்டி ஊராட்சி வசவநாயக்கன்பட்டி முதல் உப்பாறு ஓடை வரை உள்ள சாலை அமைக்க ஜல்லி கொட்டி சுமார் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சாலை அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்துக்கென ரூ.56 கோடி செலவில் தொடங்கப்பட்ட கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் பல கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.
தண்ணீர் திருட்டு
கோபால்:- ஜல்லிபட்டி அரசுப்பள்ளி அருகில் உள்ள மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது.100 அடி அகலத்தில் மலையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர் 5 அடியாக குறுக்கும் வழித் தடத்தால் மழைநீர் கிராமத்துக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.ஓடை வழித் தடத்தை மீட்க வேண்டும்.
சவுந்திரராஜன்:-பி.ஏ.பி. வாய்க்கால்களில் மட்டுமல்லாமல் அமராவதி ஆற்றிலும் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.மேலும் மடத்துக்குளம், உடுமலை பகுதிகளில் அதிக அளவில் கனிம வளத் திருட்டு நடைபெறுகிறது.
தேனீக்கள் கூடு
ராமசாமி:- கண்ணாடிப்புத்தூர் பகுதியில் பல இடங்களில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன.இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.அதனை அகற்ற வேண்டும்.
சிங்காரம்:- ஜல்ஜீவன் திட்டத்தில் கொடிங்கியம் ஊராட்சி வல்லகுண்டாபுரத்துக்கு குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ரெட்டிப்பட்டி பிரிவில் குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெகதீஷ்:- கொடிங்கியம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் ஒரே பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது.இதனால் நீண்ட தூரம் நடந்து செல்வதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.