திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவுக்கு மேல் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சாலைகள் சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் மாறின. அதன்பிறகு மழையின் தாக்கம் குறைந்து ஆங்காங்கே தேங்கிய மழைநீர் வற்ற தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திருச்சியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் மழைநீர் தேங்கியது. இரவுநேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மழையில் நனைந்துவிடாமல் இருக்க வேக, வேகமாக வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழையால் மத்திய பஸ்நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பேட்டை பகுதியில் நேற்று வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதேபோல் காட்டுப்புத்தூர், சீலைப்பிள்ளையார்புத்தூர், உன்னியூர், காடுவெட்டி, நத்தம், நாகையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.