தலைஞாயிறு, கீழ்வேளூரில் பரவலாக மழை

தலைஞாயிறு, கீழ்வேளூரில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-03 19:15 GMT

தலைஞாயிறு, கீழ்வேளூரில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மதிய வேளையில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு, வாய்மேடு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் அடித்தது. இந்த நிலையில் தலைஞாயிறு, மணக்குடி, காடந்தேத்தி, உம்பளச்சேரி, ஓரடியம்புலம், வாய்மேடு, தாணிக்கோட்டகம், தகட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழையாக கொட்டியது.

இடி, மின்னலுடன் பெய்த இந்த கனமழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. கோடை வெயில் தகிக்கும் வேளையில் இப்படி மழை பெய்து, குளிர்ச்சியை ஏற்படுத்தியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தலைஞாயிறில் 2 மணி நேரமும், வாய்மேடு பகுதியில் ஒரு மணிநேரமும் பரவலாக மழை பெய்தது.

கீழ்வேளூர்

கீழ்வேளூர், சிக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. மின் விசிறியில் இருந்து அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் கீழ்வேளூர், சிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிக்கல், பொரவச்சேரி, ராமர்மடம், ஆழியூர் சங்கமங்கலம், புலியூர், ஆவராணி, புதுச்சேரி, வடகாலத்தூர், ராதாமங்கலம், இருக்கை, இலுப்பூர் தேவூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்