பழனியை குளிர்வித்த மழை; கோடை வெயிலை விரட்டியடித்தது

பழனியை குளிர்விக்கும் வகையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

Update: 2023-04-21 21:00 GMT

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே நடமாடுவது குறைந்தது. பழனியில் நேற்றும் பகல் வேளையில் வழக்கம்போல் கடும் வெப்பம் நிலவியது.

இந்தநிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு வானில் திடீரென்று மேகக்கூட்டங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பஸ்நிலைய பகுதி, அடிவாரம் பூங்காரோடு ஆகிய இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

மேலும் சில இடங்களில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இருப்பினும் கோடை வெயிலை விரட்டியடிக்கும் வகையில் மழை பெய்ததுடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்