கூடலூரில் மழை:மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி

கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.;

Update: 2023-07-06 14:49 GMT


கூடலூர்


கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கூடலூரில் காலை முதல் சாரல் மழையும், மாலை நேரத்தில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை 3.30 மணிக்கு பெய்த மழையால் கடுங்குளிர் நிலவியது. தொடர்ந்து 6 மணிக்கு கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தது.


இதேபோல் அதே பகுதியில் நின்றிருந்த ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு படையினர், தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சகீர் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


மின்வினியோகம்


ராட்சத மரம் என்பதால் உடனடியாக அகற்ற முடியவில்லை, இதனால் பல கட்டங்களாக முயற்சி செய்து இரவு 8 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த மூங்கில்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு 8.30 மணிக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.இதேபோல் மரங்கள் விழுந்ததால் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக கூடலூர் நகர பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.


Tags:    

மேலும் செய்திகள்