மழையால் குறுவை சாகுபடி பணிகள் பாதிப்பு

கூத்தாநல்லூரில் மழையால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-10-11 18:45 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூரில் மழையால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

குறுவை சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக கடந்த மே மாதம் 24-‌ந் தேதி ேமட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடியாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் 1,760 ஏக்கரிலும், வடபாதிமங்கலம் பகுதியில் 3,492 ஏக்கரிலும் குறுவை சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெற்பயிர்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

அறுவடை பணிகள்

இந்த நிலையில், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குறுவை அறுவடை பணிகள் தொடங்கியது. ஆனால், அறுவடைக்கு முன்பு கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த அப்பகுதிகளில் அறுவடை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் இரவில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அதன் பின்னர், வெயில் அடித்ததால், வயலில் மூழ்கிய தண்ணீரை வெளியேற்றிவிட்டு, எந்திரம் மூலம் வயலில் அறுவடை பணிகளை அப்பகுதி விவசாயிகள் செய்தனர்.இதில் ஈரமான நெல்லை சாலை மற்றும் தளங்களில் கொட்டி காய வைக்கும் பணிகளில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் காலைமுதல் மதியம் வரை பரவலாக மழை பெய்தது. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை காயவைப்பதிலும், மீதி உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தொிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்