ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நிற்காமல் பெய்த மழை; ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நிற்காமல் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நிற்காமல் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாகவே மாலை நேரங்களில் சாரல் மழை பொழிந்து வந்தது. சூரியனின் வெப்பத்தை உணர முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை நிற்காமல் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. சில நேரம் சாரல் மழையாகவும், சில நேரம் கனமழையாகவும் பெய்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மழை கோட்டு அணிந்து சென்றதை காணமுடிந்தது.
கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாகவும், பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரி தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அணையில் நுழைவு பாதையில் வைக்கப்பட்டுள்ளது.
பூ பறிக்கும் தொழில் பாதிப்பு
பவானிசாகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதிகளாகும். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் வாழை, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்துள்ளனர்.
நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை பூக்கள் பறிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பவானிசாகர் பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்கள் பறிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் நெல், மஞ்சள், வாழை தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்களை நோய் தாக்கும் என்று விவசாயிகள் கவலையுடன் கூறினார்கள்.
வேமாண்டம்பாளையம் குளம்
நம்பியூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பியது.
66 ஏக்கர் பரப்பளவில் உள்ள வேமாண்டம்பாளையம் குளத்தை நம்பி அங்குள்ளவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
பெரிய ஏரி
அந்தியூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அந்தியூர் பெரிய ஏரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிரம்பிவிட்டது. இதனால் உபரி நீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் 2 நாட்களாக பெய்த மழையால் கூடுதலாக உபரிநீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரில் குளித்தும், வேடிக்கை பார்த்தும் மகிழ்ந்தார்கள்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 31 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 33.46 அடி உயரம் உள்ள இந்த அணை கடந்த மாதம் நிரம்பியது. தற்போது பெய்யும் தொடர் மழையால் வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வெளியேறிக்கொண்டு உள்ளது.
தாளவாடி
தாளவாடி சுற்றுவட்டார பகுதியான தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, பனக்கள்ளி, சிக்கள்ளி, கோடிபுரம், தலமலை, திம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2-வது நாளாக நேற்று சாரல் மழை பொழிந்தது. இதனால் மக்கள் வெளியே செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர். திம்பம் மலைப்பாதையில் தொடர்மழையால் மேகமூட்டம் சேர்ந்து இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றார்கள்.
சென்னிமலை
கடந்த 2 நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நீர்வரத்து 204 கன அடியில் இருந்து 1,193 கன அடியாக உயர்ந்தது.
40 அடி உயரம் உள்ள இந்த அணையில் 5 அடிக்கு தண்ணீர் இருந்தது. ஒரே நாளில் 10 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 15 அடியாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 578 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நுங்கும், நுரையுமாக மழை நீர் நொய்யல் ஆற்றில் வெளியேறுகிறது. ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுப்பணி துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விசைத்தறி மற்றும் கைத்தறிக்கூடங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சோலார்
சோலார், லக்காபுரம், 46 புதூர், வெண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனினும் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் வருபவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, ஊஞ்சலூர், புஞ்சைபுளியம்பட்டி, மொடக்குறிச்சி, சோலார், கவுந்தப்பாடி, நம்பியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது.