மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழை

மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கனமழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2022-11-12 18:45 GMT

காரைக்குடி, 

மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கனமழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவ மழை சிவகங்கை மாவட்டத்திலும் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்றும் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வைகையாறு, மணிமுத்தாறு, தேனாறு உள்ளிட்ட ஆற்றுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

பள்ளி, கல்லூரி விடுமுறை

காரைக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெய்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாவட்டம் முழுவதும் நேற்று பகல் முழுவதும் சூரியன் வானில் தெரியாத அளவிற்கு வானம் மேகமூட்டமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களி்ல பலத்த மழையும் பெய்தது. இதனால் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காரைக்குடி அருகே விலாவடியேந்தல் கிராமத்தின் வழியாக செல்லும் தேனாற்றின் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி சென்றது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் உற்சாகமாக ஆற்றில் மீன்கள் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

6 வீடுகள் இடிந்தன

விடிய, விடிய பெய்த கனமழைக்கு காரைக்குடி 27-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதே வார்டில் உள்ள தேவர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணவேணி என்பவரது ஓட்டு வீடு மழைக்கு தாக்கு பிடிக்காமல் நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைடுத்து அந்த பகுதி கவுன்சிலர் டாக்டர் பிரகாஷ் நேரில் சென்று முன்னேற்பாடுகளை மேற்கொண்டு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பல்வேறு பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அவதியடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று கனமழைக்கு மொத்தம் 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

மழை அளவு

நேற்று காலை 6 மணி வரை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 28.40, திருப்புவனம் 48.20, தேவகோட்டை 12.40, காரைக்குடி 69, திருப்பத்தூர் 16.30, காளையார்கோவில் 7, சிங்கம்புணரி 72.60. இதில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 72.60 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காளையார்கோவிலில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்