ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை; பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக பெய்த மழையில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

Update: 2022-11-11 21:04 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக பெய்த மழையில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

பரவலான மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி 6 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நேற்று அதிகாலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. காலை 8.15 மணி அளவில் லேசான தூறலுடன் மழை தொடங்கியது. தொடர்ந்து மழையின் வேகம் வலுத்தது. சாரலாகவும், தூறலாகவும், வலுத்தும் மாறி மாறி பெய்தது. இடைவிடாமல் இந்த மழை இருந்தது. ஈரோட்டை பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பிறகு இதுபோன்ற தொடர் மழை பெய்தது. இடி-மின்னல், காற்று எதுவும் இன்றி மிதமான மழையாக இருந்தது. மழையை விரும்புவர்களுக்கு பிடித்த பருவகாலம்போல இது இருந்தது.

மழை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி பெய்ததால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. சிறு நீரூற்றுகள் போன்று அனைத்து இடங்களிலும் வெள்ளம் ஓடி, ஓடைகளில் கலந்தது. இதனால் ஓடைகளில் வெள்ளம் அதிகரித்தது. குடியிருப்பு பகுதிகளில் தார் போடாத சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

தடுமாற்றம்

சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததால் 2 சக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறினார்கள். பாதாள சாக்கடைகளில் இருந்து வழக்கம்போல கழிவுகள் சாலையில் கொப்பளித்தன. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். வ.உ.சி.பூங்கா தற்காலிக காய்கறி சந்தையில் மழை காரணமாக தரை சகதியாக காணப்பட்டது. சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

சத்தி ரோடு, பூந்துறை ரோடு பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதால் சாலையில் வாகனங்கள் ஓட்டவே வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாறினார்கள்.

சாக்கடைகள் தண்ணீர் நிரம்பி ஓடியது. பள்ளங்களில் வெள்ளம் அதிகரித்து சென்றது. மாலை வரை மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், பவானி உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழைபெய்தது.

வேண்டுகோள்

காலையிலேயே மழை பெய்ததால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குடைகள், மழை கோட்டுகளை அணிந்து சென்றனர். இதுபோல் அலுவலகங்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக சென்றனர். பல இடங்களில் மழை நீருடன் சாக்கடையும் கலந்து சாலையில் தேங்கி நின்றது.

கார்களில் செல்பவர்கள், அந்த இடங்களில் தண்ணீரை சிதறடித்துவேகமாக சென்றதால் பாதசாரிகள், 2 சக்கர வாகனங்களில் சென்றவர்களின் மீது சாக்கடை நீர் தெறித்தது. எனவே மழைக்காலங்களில் கார்களில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களை நினைத்துப்பார்த்து, மிக மெதுவாக செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்