தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Update: 2022-11-11 15:37 GMT


திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

தொடர் மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேற்று காலை 8 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு தூறலுடன் மழை தொடர்ந்தது.

காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படுமா? என்று பெற்றோர் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் விடுமுறை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதன்பிறகு தங்கள் குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மாணவ-மாணவிகள் அவதி

இருசக்கர வாகனங்களில் நனைந்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும், குடைபிடித்தவாறும் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை பெற்றோர் கொண்டு வந்து விட்டனர். தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடியே புறப்பட்டனர். சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாநகர வீதிகள் மற்றும் குறிப்பிட்ட பிரதான சாலைகள் சகதி காடாக காட்சியளித்தது. மழைநீர் தேங்கியதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சிறிது நேரம் கூட மழை நிற்காமல் பெய்தபடியே காணப்பட்டது. மழைக்கு ஒதுக்கி நின்றவர்கள் கூட பொறுமை இழந்து மழையிலேயே வாகனங்களில் சென்றனர். மாலையிலும் மழை பெய்தது. பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள் அவதியடைந்தனர். பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

மூலனூரில் 2 மணிநேரம் கன மழை பெய்தது. பின்னர் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதேபோல் முத்தூர், வெள்ளகோவிலிலும் காலை முதல் இரவு வரை பெய்து ெகாண்டே இருந்தது. உடுமலையில் காலை முதல் இரவு வரை மழை தூரிக்ெகாண்டே இருந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இரவு வரை மழை நீடித்தது. சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்