குடிசை பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

திட்டச்சேரியில் குடிசை பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-11-09 19:15 GMT

திட்டச்சேரியில் குடிசை பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மழைநீர் சூழ்ந்தது

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசைகளாக உள்ளன. இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது. மொத்த மழை நீரும் வடிய வேண்டிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது. இதனால் குடிசைகளின் சுவர் சாய்ந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்ப்பு

மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுமதி:-

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

ஜீவா:- கடந்த ஆண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகளை சுற்றி மழை நீர் தேங்கியது. அதனை அகற்றி தர கோரியும், வடிகால்களை தூர்வாரக்கோரியும் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் சார்பாக மனுக்கள் கொடுத்தோம். ஆனால் தற்போது வரை வடிகால்கள் தூர்வாரப்படாமல் அதே நிலையில் உள்ளது.

நோய் பரவும் அபாயம்

அமராவதி:- மழைக்காலங்களில் மெயின் ரோடு, கடைத்தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் ஆண்டவர் நகர் வழியாக ஆலங்குடிச்சேரி வாய்க்காலிலும், புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழைநீர் கிளி வாய்க்கால் வழியாக வடிந்து வந்தது. தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரவும், மழைநீரை வடிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்