தேன்கனிக்கோட்டை அருகே பலத்த மழை: தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி

Update: 2022-09-05 16:27 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டியை அடுத்த ஏரிகோடி கிராமத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மேலும் ஏரிகோடி கிராமத்தில் இருந்து தேவந்தொட்டி வரை செல்லும் மண் சாலை மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலங்கள் மூழ்கின

தளி பகுதியில் பெய்த கனமழையால் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடவிசாமிபுரம் பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சனத்குமார் நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதேபோல் தளியில் இருந்து காடுகெம்பத்தப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலங்கள் பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே பலத்த மழைக்கு தளி ஒன்றியத்தில் உள்ள கிரிராஜன், பாளையங்கோட்டை, சென்னமாளம், நஞ்சையன் ஏரிகள் நிரம்பி உள்ளன. அவற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை அளவு

இதனிடையே நேற்று காலை நிலவரப்பட்டி தேன்கனிக்கோட்டையில் 42 மி.மீட்டர் மழையும், தளியில் 50 மி.மீட்டர் மழையும், அஞ்செட்டியில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்