ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பஸ் நிலைய சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பஸ் நிலைய சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது.
பலத்த மழை
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று அதிகாலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது.
ராமேசுவரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பஸ் நிலையம் செல்லும் முக்கிய சாலையான எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வழக்கம்போல் குளம் போல் தேங்கி நின்றது.
மழைநீர் அகற்றம்
இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து நகராட்சி தலைவர் நாசர்கான் மற்றும் ஆணையாளர் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பெயரில் ராம தீர்த்தம் தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. ராமநாதபுரம் பகுதியிலும் லேசான மழை பெய்தது. பகல் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.