அடிக்கடி பழுதாகும் உச்சிப்புளி ரெயில்வே கேட்டால் பயணிகள் அவதி

அடிக்கடி பழுதாகும் உச்சிப்புளி ரெயில்வே கேட்டால் அந்த வழியாக பயணிக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-09-14 17:20 GMT

பனைக்குளம்,

அடிக்கடி பழுதாகும் உச்சிப்புளி ரெயில்வே கேட்டால் அந்த வழியாக பயணிக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ரெயில்வே கேட்

ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது உச்சிப்புளி. ராமேசுவரத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, திருப்பதி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி வழியாகவே ராமநாதபுரம் சென்று செல்ல வேண்டும்.

ராமேசுவரத்தில் இருந்து வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்லும்போது உச்சிப்புளி பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் மூடப்படுகின்றது. இதேபோல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பதி, கன்னியாகுமரி, வாரணாசி, ஒடிசா, காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரெயில்களும் உச்சிப்புளி வழியாக வரும்போது ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

அடிக்கடி பழுது

இதுபோன்று ரெயில்கள் வரும்போது தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறை உச்சிப்புளி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ், கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் ஒவ்வொரு முறை கேட் மூடப்படும் போதும் காத்திருந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் உச்சிப்புளி பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுதவிர உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் ரெயில்வே கேட் இருப்பதும், மூடி இருப்பது குறித்தும் தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து அவதிக்கு உள்ளாகின்றனர். விபத்தும் ஏற்படுகிறது.

கோரிக்கை

நேற்று ரெயில்வேகேட் பழுதடைந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மண்ஆய்வு பணி முடிந்துவிட்டது. ஆனால் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடுதலாக மின் விளக்குகள் அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்