திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் கத்தியுடன் புகுந்து வாலிபர் ரகளை

திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் அதிகாலையில் கத்தியுடன் புகுந்த வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் 2 மணி நேரம் ரெயில் நிைலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-17 18:17 GMT

திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் அதிகாலையில் கத்தியுடன் புகுந்த வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் 2 மணி நேரம் ரெயில் நிைலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கத்தியுடன் புகுந்த வாலிபர்

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் பகுதிக்கு கத்தியுடன் 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென்று வந்தார். கத்தியை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் சுழற்றியபடி பயணிகளை மிரட்டினார்.

அவ்வப்போது தனது கையையும் கத்தியால் கீறிக்கொண்டே சத்தம் போட்டார். கலெக்டர் வர வேண்டும், எம்.எல்.ஏ. இங்கு வர வேண்டும். எனது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சத்தம் போட்டார். டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் கத்தியுடன் நின்ற வாலிபரை பார்த்ததும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரெயில் நிலைய ஊழியர்கள், பயணிகளை அந்த ஆசாமியின் அருகே செல்லவிடாமல் அப்புறப்படுத்தினார்கள்.

நடனம் ஆடினார்

சம்பவம் பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் மியூரியல், போலீஸ்காரர் கோபி, கோபால் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபரோ தகாத வார்த்தைகள் பேசியபடியும், நடனம் ஆடியபடியும், திடீர், திடீரென்று சத்தம் போட்டபடியும் இருந்தார். கையில் கத்தி வைத்திருந்ததால் யாரும் அவர் அருகே செல்லவில்லை. 1 மணி நேரத்தை கடந்தும் அந்த வாலிபர் எங்கும் செல்லாமல் தொடர்ந்து ரகளை செய்தபடியே இருந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை வலைவீசி பிடிக்க தயாரானார்கள். திருப்பூர் வடக்கு போலீசாரும் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயாராக நின்றது. வலைவீசி அந்த நபரை பிடிக்க தயாரானார்கள்.

கத்தியை தட்டிவிட்ட போலீஸ்காரர்

அப்போது ரெயில்வே போலீஸ்காரர் கோபி, நைசாக அந்த நபரிடம் பேச்சுக்கொடுத்தபடி இருந்தார். அந்த ஆசாமியும் பதிலுக்கு பேசினார். ஒரு கட்டத்தில் அவரது கவனத்தை திசை திருப்பி, போலீஸ்காரர் கோபி நைசாக அருகில் சென்று கையில் இருந்த கத்தியை தட்டி விட்டார்.

அந்த நேரத்தில் அங்கு சுற்றியிருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து குண்டுக்கட்டாக தூக்கினார்கள். பின்னர் 108 ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காலை 6 மணி வரை நடந்த இந்த சம்பவத்தால் ரெயில்வே நிலைய முதல் நடைமேடை டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

மனைவியுடன் தகராறு

விசாரணையில் அவர் திருப்பூர் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு கண்ணன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் நள்ளிரவு 1 மணிக்கு போலீசார் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த கண்ணன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அதன்பிறகே அவர் திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கண்ணன் காணப்பட்டதால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 2 மணி நேரமாக போலீசாரை திணறிடித்த வாலிபரால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்