ரெயில்வே ஊழியர் வீட்டை உடைத்து திருட்டு
நெல்லை டவுனில் ரெயில்வே ஊழியர் வீட்டை உடைத்து திருட்டு நடந்தது.
பேட்டை:
நெல்லை டவுனை அடுத்த கோடீஸ்வரன் நகர், 16-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் சென்னை பெரம்பூர் ெரயில் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோடீஸ்வரன் நகருக்கு வந்தார். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள கோவில் கொடை விழாவுக்கு சென்றனர். விழா முடிந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர். உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் உள்ள துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதுகுறித்து கண்ணன், பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.