ரெயில்வே வாரியத்தின் தலைவர் 2-வது நாளாக ஆய்வு - ரெயில் பயணிகளிடம் உரையாடினார்

ரெயில்வே வாரியத்தின் தலைவர் சென்னையில் 2-வது நாளாக ஆய்வு நடத்தினார். அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் கலந்துரையாடினார்.;

Update: 2022-10-30 08:52 GMT

ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினய் குமார் திரிபாதி, நேற்று முன்தினம் சென்னை வந்தார். தெற்கு ரெயில்வேயில் உள்ள முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் சென்னையில் பல இடங்களில் ஆய்வு செய்தார்.

அந்தவகையில் தெற்கு ரெயில்வேயின் தலைமை செயலகத்தில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா மற்றும் சென்னை உள்ளிட்ட 6 கோட்டங்களின் மேலாளர்களுடன், ரெயில்வே வாரியத்தின் தலைவர் வினய் குமார் திரிபாதி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர், தெற்கு ரெயில்வேயின் 9 ரெயில் நிலையங்களை புணரமைக்கும் பணிகள், மின்மயமாக்கல், பாரத் கவுரவ் ரெயில்கள், ரெயில் நிலையங்களில் கையடக்க முனையங்கள் மற்றும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் முன்னேற்றம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மதிப்பாய்வு செய்தார்.

தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி, டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், ஓ.எச்.இ. ஆய்வின்போது பயன்படுத்தப்படும் 'பிரகிருதி ட்வின் கோச் டவர்' காரைப் பார்வையிட்டார். பின்னர் மூர்மார்க்கெட் வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள காஞ்சீபுரம் சில்க் துணிக்கடையை பார்வையிட்டு, அங்கிருந்த ரெயில் பயணிகளுடன் உரையாடினார். ஆய்வுக்குப்பிறகு, அவர் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

சென்னை கோட்டத்தில் வாலாஜா சாலை, தலங்கை, ஆரம்பாக்கம், தடா மற்றும் பெடபெரியா ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் புதிய மின்னணு அமைப்பு திட்டம், சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம், அம்பத்தூர்-ஆவடி, சோளிங்கர்-தளங்கை, காவனூர்-குடியாத்தம், லத்தேரி-காவனூர், மேல்பாக்கம்-சித்தேரி, அரக்கோணம்-திருவலங்காடு, திருவள்ளூர்-கடம்பத்தூர் மற்றும் வளத்தூர்-மேல்பட்டி ஆகிய 9 தனி பிரிவுகளில், தானியங்கி-சிக்னல் அமைப்பு திட்டம், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பல பிரிவு டிஜிட்டல் அச்சு கவுண்ட்டர் (எம்.எஸ்.டி.ஏ.சி) திட்டம், மூர்மார்க்கெட் வளாகம் மற்றும் என்.ஜி.ஓ. கட்டிடம் மற்றும் கலங்கரை விளக்கம் நிலையம் ஆகியவற்றில் 'பிளவர் டர்பைன்' காற்றாலை திட்டம் ஆகிய 4 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதையடுத்து அந்த திட்டங்களை காணொலி காட்சி மூலம் வினய் குமார் திரிபாதி வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்