திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம்
திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரெயில் சோதனை ஓட்டம்
பழனி-திண்டுக்கல் இடையேயான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து பழனியில் இருந்து திண்டுக்கல் வரை 58 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தினர்.
மேலும் மின்மயமாக்கப்பட்ட இந்த ரெயில் பாதையை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழனி-திண்டுக்கல் இடையேயான மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி, ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த் தலைமையில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் மேலாளர் ரமேஷ்பாபு, திண்டுக்கல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், உதவி கோட்ட பொறியாளர் நாராயணன், திண்டுக்கல் ரெயில்வே பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் இறுதிக்கட்ட பணிகளை திண்டுக்கல்லில் இருந்து தொடங்கி, பழனி வரை ஆய்வு செய்தனர். இதற்காக அவர்கள் இன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலில் சோதனை செய்தபடி பழனிக்கு சென்றனர்.
மின்சார என்ஜின்
பின்னர் அவர்கள் பழனி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து பழனியில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு, 4 பெட்டிகளுடன் சோதனை ஓட்டமாக ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த ரெயிலுக்கு பூஜை நடைபெற்றது.
இந்த ரெயில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து, ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த பாதையில் மின்சார என்ஜினுடன் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.