நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண ரெயில் மீண்டும் இயக்கம்
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
நெல்லை-மேட்டுப்பாளையம்
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, பழனி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கடந்த ஒரு மாதமாக இயக்கப்படவில்லை. அதனை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று தொடர்ந்து தென்மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06030) வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசிக்கும், நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரைக்கும் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
நிறுத்தங்கள்
மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06029) வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரெயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி பெட்டியுடன் இணைந்த பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
ரூ.3 கோடி வருமானம்
நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இயக்கப்பட்டன. இதில் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு கட்டண ரெயில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், நெல்லை-தாம்பரம் சிறப்புக்கட்டண ரெயில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் இயக்கப்பட்ட 5 மாதங்களில் தென்னக ரெயில்வேக்கு ரூ.3 கோடியே 70 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. நெல்லையில் மாற்று ஏற்பாடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டிகளை கொண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால், இதனை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
நெல்லை-தாம்பரம் ரெயிலில் 17303 பயணிகள் பயணம் செய்து ரூ.ஒரு கோடியே 14 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம்-நெல்லை ரெயில் 16214 பயணிகள் பயணம் செய்து ரூ.97 லட்சத்து 61 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயிலில் 15189 பயணிகள் பயணம் செய்து ரூ.69 லட்சத்து 50 ஆயிரமும், மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயிலில் 18978 பயணிகள் பயணம் செய்து ரூ.86 லட்சத்து 54 ஆயிரமும் ஈட்டியுள்ளது.