ரெயிலில் கட்டண சலுகை மீண்டும் கிடைக்குமா?-விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்பு

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும்? என்று விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-01 20:59 GMT

கட்டண சலுகை

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடும், வீரர், வீராங்கனைகள் நலன் கருதி அவர்களுக்கு ரெயில்வே வாரியம் சார்பில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ரெயிலில் படுக்கை வசதிக்கு 50 சதவீதமும், குளிர்சாதன வசதிக்கு 30 சதவீதமும் கட்டண சலுகை அளித்து வந்தது. இதற்காக கோடிக்கணக்கில் ரெயில்வே வாரியம் செலவிட்டது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இந்தியா முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது. இந்த வருவாய் இழப்பை சமாளிக்க விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து தற்போது நாடு முழுவதும் ரெயில் சேவை வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் கூறியதாவது:-

சேலம் அழகாபுரத்தை சேர்ந்த கவுதம் கிரிஷ்:- சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நான் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். ரெயிலில் பயணம் செய்ய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வந்த கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். சலுகைகள் வழங்கும் போது மேலும் பலர் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

கடன் வாங்கி பங்கேற்பு

சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவி நர்மதாபிரீத்தி:-

ஆட்டோ டிரைவரின் மகளான நான் கயிறு இழுத்தல் போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்டு விளையாடி உள்ளேன். சமீபத்தில் அரியானா மாநிலம் குருசேத்திரம் பகுதியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றேன்.

இந்த போட்டிக்கு ரெயிலில் சென்று, வர எனக்கு ரூ.4 ஆயிரத்து 500 செலவானது. குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் கடன் வாங்கியே என்னை போட்டிக்கு அனுப்பி வைத்தனர். என்னை போன்று பலர் பணத்தை கடன் பெற்றே போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். எனவே ரெயில்களில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தினால், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வசதியாக இருக்கும்.

இலவசமாக வழங்க வேண்டும்

வைகுந்தத்தை சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை சவுமியா ஸ்ரீ:-

விவசாய குடும்பத்தில் பிறந்த நான், இறகுப்பந்து போட்டியில் தீவிர பயிற்சி பெற்று வருகிறேன். சமீபத்தில் தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினேன். இதற்கு சென்று வர அதிக பணம் செலவானது. எனது தந்தை இறந்து விட்ட நிலையில், இந்த போட்டிக்கு சென்று வரும் செலவுக்கு எனது தாய் மிகவும் சிரமப்பட்டார். எனவே சலுகை கட்டணம் என்பதை மாற்றி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரெயில் டிக்கெட்டை இலவசமாக வழங்க வேண்டும்.

சேலத்தை சேர்ந்த சக்தி மகேந்திரன்:-

போல்ட் வால்ட் விளையாட்டில் சாதனை படைத்த நான், தற்போது விளையாட்டு இடஒதுக்கீட்டில் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறேன். 18 வயதே ஆன நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களை ஊக்குவிக்க ரெயில்வே வாரியம் வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். இதன்மூலம் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள். எனவே அரசு இந்த கட்டண சலுகை வழங்குவதை மீண்டும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடற்கல்வி இயக்குனர்

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார்:-

வருகிற 2028-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி கேட்டு உள்ளனர். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் விளையாட்டில் ஆர்வம் கொண்டு உள்ளனர். ஆனால் பொருளாதார நிலையால் அவர்களால் விளையாட்டில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அரசு கல்லூரி மாணவிகள் குறுவட்ட அளவிலான போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது. திறமை இருந்தும் பண கஷ்டத்தால் அவர்களால் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில்வே வாரியம் நிறுத்தி வைத்துள்ள கட்டண சலுகையை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

உதவிகரமாக இருக்கும்

கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் அம்சவேணி:-

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட அதிகம் செலவு செய்து போட்டி நடைபெறும் இடங்களுக்கு செல்ல முடியாது. தங்களது குழந்தைகள் விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் பொருளாதார நிலையை எண்ணி அவர்களால் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களால் விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. விளையாட்டில் சாதனை படைத்த அதிகம் பேர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ரெயில்வேயில் வேலை பார்த்து வருகின்றனர். எனவே விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க உதவிகரமாக இருக்கும் வகையில் வீரர்களுக்கு ரெயிலில் கட்டண சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்