செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று தென்மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை கடந்தபோது திடீரென அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கும் என கருதி ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி மெதுவாக ரெயிலை இயக்கினார்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். அதற்குள் ரெயில் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ், மங்களுரூ எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு மற்றும் பரனூர் ரெயில் நிலையங்களில் நிறுத்த சம்பந்தப்பட்ட ரெயில் டிரைவர்களுக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து ரெயில்வே பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து ஆய்வு செய்ததில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து விரிசலை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு விரிசலை சரி செய்தனர். அதன் பின்னர் அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டன.
அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.