ராகுல் காந்தியின் நடைபயணம் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய அடித்தளமாக அமையும்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் நடைபயணம் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய அடித்தளமாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2022-08-26 11:38 GMT

ராகுல்காந்தியின் நடைபயணம் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய அடித்தளமாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'இந்தியா ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் நடத்துகிறார். இந்த நடைபயணம் வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் பயணத்தை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். ஒரு அரசியல் புரட்சியை இங்கிருந்து அவர் தொடங்குகிறார். நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டார். அதுபோல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை நாட்டில் இருந்து ஒழிக்க, அகற்ற ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இதனை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இந்த வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.

அடித்தளம்

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே நம் லட்சியம். அதற்கு அடித்தளமாக இந்த நடைபயணம் அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். கன்னியாகுமரியில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் தான் நாடு முழுவதும் ஏற்படும். எனவே, நடைபயணம் தொடக்க நிகழ்ச்சியை ராகுல் காந்தியே வியக்கும் அளவுக்கு வெற்றிகரமாக்கி காட்ட வேண்டும்.

நமது எதிரிகள் வலிமை மிக்கவர்கள். அறிவுக்கூர்மையானவர்கள். அவர்களை எதிர்ப்பது எளிதானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் ஆன்மிகம் என்ற ஆன்மாவை அப்புறப்படுத்திவிட்டார்கள் என்று தமிழக கவர்னர் விமர்சித்து உள்ளார். இது வரம்புமீறிய செயல். எந்தவித மதசார்பும் இல்லாத நூல் திருக்குறள். கவர்னர் முதலில் திருக்குறளை முழுமையாக படிக்க வேண்டும். இதுபோன்ற கலாச்சார படையெடுப்பை தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்துவார்கள். அதனை எதிர்கொண்டு நாம் முறியடிக்க வேண்டும். நடைபயணத்துக்கு வரும் ஒவ்வொருவரும் கையில் கொடி ஏந்தி வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, விஜய் வசந்த், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சி.எஸ்.முரளிதரன், காமராஜ், பினுலால், கே.டி.உதயம், நவீன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளருமான கே.பெருமாள்சாமி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம்.சகாயராஜ், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான்பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்துள்ளது. அமெரிக்கர் டாலர் இப்போது 80 ரூபாய் வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம் பா.ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கை தான். விவசாயிகளுக்கு 2 மடங்கு வருமானம் கிடைக்கும் என பிரதமர் மோடி சொன்னார். அதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தவறு, வீழ்ச்சி. இதை மக்களிடம் எடுத்து கொண்டு சொல்ல இந்த பயணத்தை ராகுல் மேற்கொள்கிறார். பா.ஜனதாவுக்கும், சுதந்திர போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி தான் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்