ராகுல்காந்தி நடைபயணம் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; கே.எஸ்.அழகிரி பேட்டி

ராகுல்காந்தி நடைபயணம் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2022-08-26 19:58 GMT

ராகுல்காந்தி நடைபயணம் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

ராகுல்காந்தி எம்.பி. வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபயணம் செல்கிறார். இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்த நெல்லை மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசினார். அப்போது. அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேரும், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து தலா 10 ஆயிரம் பேரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டங்கள் ஆகும். எனவே இந்த மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வரவேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மயூரா ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீ.பி.துரை, வக்கீல் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் காமராஜ், மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், கே.பி.கே.ஜெயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாற்றத்தை ஏற்படுத்தும்

முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி தொடங்கும் நடைபயணம் காங்கிரஸ் கட்சியினர் இடையே மகிழ்ச்சியை, அங்கீகாரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியர். சமயம், மொழி, இனம் பாகுபாடு இல்லாதது இந்தியா. மோடி ஆட்சிப் பொறுப்பேற்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, சரக்கு சேவை வரிவிதிப்பால் வியாபாரிகள் அவதி உள்ளிட்டவைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ராகுல்காந்தி இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த பயணம் தமிழகத்தில் 4 நாட்கள் நடக்கிறது. ராகுல்காந்தியின் நடைபயணம் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதாலும், அவருக்கு பதவி இல்லை என்பதாலும் விலகிச் செல்கிறார். இதுபோன்று விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தம் அடைந்து வருகிறது என்பதை நாங்கள் உணர்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்