ராகுல்காந்தி இன்று ஊட்டி வருகை;தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்

ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) ஊட்டி வருகிறார். அவர், இங்கு தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.

Update: 2023-08-11 18:45 GMT

ஊட்டி: ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) ஊட்டி வருகிறார். அவர், இங்கு தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.

ராகுல்காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

இதனை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. இதே தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டும் உறுதி செய்ததால், ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு, இடைக்கால தடை விதித்ததால் மீண்டும் ராகுல்காந்தி எம்.பி. பதவியை பெற்று நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார்.

ராகேஷ் சர்மாவுடன் சந்திப்பு

இந்த நிலையில் அவர் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும்(சனிக்கிழமை), நாளையும் திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் வருகிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து காலை 9.15 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி, 11 மணிக்கு ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருகிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் அதேவிடுதியில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்து கேட்டு அறிந்து கொள்கிறார்.

பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல்

இதையடுத்து மதிய உணவை முடித்த பின்பு 1 மணியளவில் ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அந்த மக்களிடம் கலந்துரையாடுகிறார். மேலும் அவர்களது கோவிலையும் பார்வையிடுகிறார். இதன்பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார். முன்னதாக வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல்காந்தி வருகையையொட்டி தனியார் தங்கும் விடுதி, முத்தநாடுமந்து கிராமத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்