கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம்: அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறார்

கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபயணத்தை தொடங்குகிறார்.

Update: 2022-08-10 21:38 GMT

நாகர்கோவில்,

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ராகுல்காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைபயணமானது கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது. அங்கிருந்து புறப்படும் ராகுல்காந்தி நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாடு முழுவதும் இந்த நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார்.

முன்னேற்பாடு பணிகள்

கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையொட்டி நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ள பிரசாத், தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன், எம்.பி.க்கள் ஜோதிமணி, ஜெயக்குமார், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

அவர்கள் கன்னியாகுமரிக்கு சென்று ராகுல்காந்தி நடைபயணம் தொடங்க உள்ள இடத்தையும், அவர் செல்லும் பகுதிகளையும் பார்வையிட்டனர். நடைபயணத்துக்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தேசிய தலைவர்கள் வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்