ராகுல்காந்தி தகுதி நீக்கம்: பேசியதற்காகவே எம்.பி. பதவியில் இருந்து நீக்கி விட்டனர் -சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை, பேசியதற்காகவே எம்.பி. பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்று தமிழக சட்டசபையில் அவை முன்னவர் துரைமுருகன் கருத்து கூறினார்.

Update: 2023-03-25 00:05 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் போளூர் எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கினார். அவர் பேசியதாவது:-

2021-22-ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் நிறுவப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் அதுபற்றி எந்தவிதமான தகவலும் இல்லை. புதிய வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை 50 வட்டாரங்களில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில், பின்தங்கிய 100 வட்டாரங்களில் செயல்படுத்திய மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டம்தான். இந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா? அல்லது, அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதா?

நீட் தேர்வு

கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் ஆண்டுதோறும் ஆடம்பரமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு திட்ட அறிக்கை கூட அறிவிக்கப்படவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்காக அறிவித்துள்ளீர்கள். கடந்த 2 நிதியாண்டுகளாக ரூ.2,251 கோடி மதிப்பீட்டில் 3,713 புதிய பஸ்கள் வாங்குவதாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்-அமைச்சர் பேட்டி அளித்து வருகிறார். அதில் சிலவற்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்களே....

இவ்வாறு அவர் பேசினார்.

பேசியதால் நீக்கம்

உடனே அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் குறுக்கிட்டு, "இவ்வளவு நேரமானாலும் ஜனநாயக முறைப்படி உங்களை பேச விடுகிறோம். ஆனால் பேசியதற்காகவே இப்போது ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எடுத்துவிட்டனர். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இங்கு அப்படியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பேச அனுமதிக்கிறோம்" என்று கூறினார்.

பின்னர், தொடர்ந்து பேசுவதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அனுமதி கோரினார். ஆனால் அவை நிகழ்ச்சிகளை முடித்து வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்