எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
திருப்பத்தூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
எருது விடும் விழா
கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கால்நடை டாக்டர்கள், காளைகளை பரிசோதனை செய்து 3 காளைகள் போட்டியில் பங்கேற்க தடை விதித்தனர். எருது விடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுகுமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், டி.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சாந்தா சண்முகம் வரவேற்றார். வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீறிப்பாய்ந்து ஓடின
எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த, காளைகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு மோட்டார் சைக்கிள், கலர் டி.வி. என 61 பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞரணியினர், எருது விடும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.