மது அருந்த பணம் தரமறுத்ததால் ஆத்திரம்: பழ வியாபாரியை கல்லால் அடித்து கொல்ல முயற்சி - 2 பேர் கைது
மது அருந்த பணம் தரமறுத்ததால் பழ வியாபாரியை கல்லால் அடித்துக்கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38). இவர், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வினோத்குமார் (30), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாபுலால் (38) ஆகிய இருவரும் சுரேஷ்குமாரை மிரட்டி மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டனர். ஆனால் அதற்கு சுரேஷ்குமார் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது இருவரும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் சுரேஷ்குமார் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி பஸ் நிறுத்தம் அருகே வியாபாரத்தை முடித்துவிட்டு தள்ளுவண்டியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வினோத்குமார். சுரேஷ்குமாரை எழுப்பி மது அருந்த வரும்படி அழைத்தார்.
அதை நம்பி சுரேஷ்குமாரும் அவருடன் சென்றார். அருகில் உள்ள ெரயில் தண்டவாள பாதைக்கு சென்றபோது, திடீரென அங்கு மறைந்து இருந்த பாபுலால் மற்றும் வினோத்குமார் இருவரும் சேர்ந்து சுரேஷ் குமாரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் ரத்தம் வழிந்தநிலையில் சுரேஷ்குமார் சரிந்தார். அப்போது அவரது தலையில் ஜல்லி கல்லால் அடித்தனர். வலி தாங்க முடியாமல் அலறிய சுரேஷ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததால் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் கல்லால் அடித்து கொல்ல முயன்றதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் பாபுலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.