'சிகரெட்' வாங்க பணம் தராததால் ஆத்திரம்: தந்தையை அடித்துக் கொன்ற மகன்

தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-05-04 21:54 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி சந்திரா (55). இவர்களது மூத்த மகன் வினோத்குமார்(35). திருமணமான இவர், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். பின்னர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை 'சிகரெட்' வாங்க தனது தந்தை கணேசனிடம் வினோத்குமார் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் கடைக்கு சென்று கடன் கேட்டுள்ளார். கடைக்காரரும் கடன் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்ற வினோத்குமார் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே அவர் வீட்டில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது தந்தை கணேசனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பீதியடைந்த வினோத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத் குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில், கிணற்றில் குதித்து அங்குள்ள பைப்பை பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்த வினோத்குமாரை, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்