அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய 23-ந் தேதி குலுக்கல்

வேலூர் தொரப்பாடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வருகிற 23-ந் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-14 17:20 GMT

அனைவருக்கும் வீடு திட்டம்

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் 10-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த திட்டத்தில் பயன்பெற 824 பயனாளிகள் கலெக்டரின் பரிந்துரையின் பெயரில் ஒப்புதல் பெறப்பட்டு, பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் வரைவோலையாக கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

23-ந் தேதி குலுக்கல்

மேலும் இதுதொடர்பாக அனைவருக்கும் பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டது. அதன்பேரில் 367 பேர் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தி உள்ளனர். பங்களிப்பு தொகை செலுத்திய பயனாளிகள் மட்டும் குலுக்கலில் கலந்து கொள்ள இயலும். அவர்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும்.

குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகை செலுத்தியவர்களுக்கு வருகிற 23-ந் தேதி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் காலை 11 மணிக்கு குலுக்கல் நடைபெற உள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் குடியிருப்பு பெற வரைவோலை செலுத்திய 367 பேரும் குலுக்கலில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்