முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி

பாலக்கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பதால் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-19 18:45 GMT

பாலக்கோடு

முள்ளங்கி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.25-க்கு விற்பனையானது.

பாலக்கோடு பகுதியில் முள்ளங்கி அறுவடை தொடங்கியதால் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது முள்ளங்கி அறுவடை தொடங்கி உள்ளது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து சுத்தம் செய்து உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை கூலி, வண்டி வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாததால் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்