விபத்தில் படுகாயமடைந்த தாய், மகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு

Update: 2022-11-12 16:58 GMT


விபத்தில் படுகாயமடைந்த தாய், மகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு திருப்பூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டது. திருப்பூர் சோளிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவருடைய மனைவி வனஜாதேவி (வயது 40). கடந்த 2017-ம் ஆண்டு ஸ்ரீராம் தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் காரில், ஒட்டச்சத்திரத்தை அடுத்த கொசவம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வனஜாதேவி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர். இருப்பினும் வனஜாதேவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சக்கர நாற்காலி உதவியுடன் நகர்கிறார். அவருடைய மகளுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளார். இவர்களுக்கு விபத்து நஷ்ட ஈடு கேட்டு திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

ரூ.1 கோடி இழப்பீடு

இந்த வழக்கு நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்ட வனஜாதேவி, அவருடைய மகள் ஆகியோருக்கு விபத்து இழப்பீடாக ரூ.1 கோடியே 5 லட்சம் வழங்க ராயல் சுந்தரம் இன்சூரன்சு நிறுவனம் ஒப்புக்கொண்டு அதற்கான காசோலையை வழங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜராகி வாதாடினார்.

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் காசோலையை வழங்கினார்கள். இதில் நீதிபதிகள் பத்மா, சுகந்தி, வக்கீல்கள் பழனிசாமி, மாணிக்கராஜ், விவேகானந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ரூ.45 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு

இதுபோல் கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). இவருடைய மனைவி கோகிலா (33). கார்த்திக் பனியன் நிறுவன தொழிலாளி. கோகிலா தனியார் பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த 16-6-2020 அன்று மோட்டார் சைக்கிளில் அவினாசிபாளையம் திருச்சி-கோவை ரோட்டில் சென்றபோது, கார் மோதி விபத்துக்குள்ளானார்கள். இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். கோகிலாவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு சக்கர நாற்காலி உதவியுடன் இருக்கிறார்.

இருவருக்கும் விபத்து நஷ்ட ஈடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருவருக்கும் விபத்து நஷ்ட ஈடாக ரூ.45 லட்சத்து 60 ஆயிரம் வழங்க நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ஒப்புதல் அளித்து அதற்கான காசோலையை கோகிலாவிடம் நேற்று வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் சத்யா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்