'அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு' என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலத்தில் சுவரொட்டிகள்-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டியதால் பரபரப்பு

‘தொடர் தோல்வியால் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு’ என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-10 22:13 GMT

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.

இதனால் அந்த தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் செந்தில்முருகன் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிட்டு தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.

கண்டன சுவரொட்டி

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரை கண்டித்து நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த மாவட்ட செயலாளரான தினேஷ் பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டியில், அ.தி.மு.க.விற்கு தொடர் தோல்வியை பெற்று தந்த எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை, புரட்சி தலைவி அம்மா வளர்த்த இயக்கத்தை அழித்து கொண்டிருக்கும் பழனிசாமியே வெளியேறு, ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்த பழனிசாமியே வெளியேறு, தொண்டர்களை மதிக்காத பழனிசாமியே வெளியேறு, கட்சியை அழித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியே கழகத்தை விட்டு வெளியேறு போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சுவரொட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதனை கிழித்து அகற்றினர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

இதனிடையே, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்