இருள்சூழ்ந்த இடத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

இருள்சூழ்ந்த இடத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் பாதுகாப்பு கேள்விக்குறியதாகிறது.;

Update: 2022-12-22 20:59 GMT

புறநகர் பஸ்கள்

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. திருச்சிக்கு தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் புறநகர் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானா வழியாக வந்து ஜங்ஷன் மேம்பாலத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி வழிவிடு வேல்முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ராக்கின்ஸ்ரோடு வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

வழிப்பறி சம்பவங்கள்

ஆனால் தற்போது புறநகர் பஸ்கள் அனைத்தும் ஜங்ஷன் மேம்பாலத்தில் இருந்து ரெயில் நிலையம் வழியாக செல்லாமல் நேராக அரிஸ்டோ ரவுண்டானா வழியாக சுற்றி மத்திய பஸ் நிலையத்தை சென்று அடைகிறது. ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகளை அங்குள்ள இருள்சூழ்ந்த இடத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டு செல்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக அரிஸ்டோ ரவுண்டானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவுநேரங்களில் சமூகவிரோத கும்பல் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக செல்பவர்களை வழிமறித்து செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து செல்வது, உடைமைகளை அபகரித்து செல்வது என அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகின்றன.

பயணிகள் பாதுகாப்பு

இந்தநிலையில் வெளியூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளை அவ்வாறு இருள் சூழ்ந்த இடத்தில் இறக்கி விட்டு செல்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஒருசில நேரங்களில் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை பறிகொடுத்து விட்டு போலீஸ் நிலையங்களில் கண்ணீருடன் புகார் அளிக்க செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

மாறாக, ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தால் அந்த பகுதியில் நள்ளிரவு 12 மணி வரை ஏராளமான கடைகள் திறந்து இருக்கும். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பஸ் பயணிகளுக்கும் பாதுகாப்பு இருக்கும். துப்பாக்கி தொழிற்சாலை, நவல்பட்டு, மாத்தூர், மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மத்திய பஸ் நிலையம் நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாகத்தான் செல்கின்றன.

ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக...

ஆனால் புறநகர் பஸ்கள் மட்டுமே ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதி வழியாக செல்வதில்லை. ஒரேவழித்தடத்தில் மாநகர், புறநகர் பஸ்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தால் இருவழித்தடங்களில் பஸ் நிலையத்துக்கு செல்வதாக கூறினாலும், ஒரு சில நாட்களை தவிர பெரும்பாலும் இரவு நேரங்களில் ராக்கின்ஸ்ரோட்டில் வாகன போக்குவரத்து குறைவாகத்தான் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்