கொரட்டகிரி கிராமத்தில்கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகள் செல்ல பொதுமக்கள் எதிர்ப்புகூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Update: 2022-12-29 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

கொரட்டகிரி கிராமத்தில் கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கூடாரம் அமைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாரிகள் செல்ல எதிர்ப்பு

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன இந்த கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கொரட்டகிரி கிராமத்தின் வழியாக சாலையில் டிப்பர் லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறி இருந்தது.

போராட்டம்

இதையடுத்து நேற்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.

அப்போது கிராமத்தின் வழியாக சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் வழிமறித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை காட்டி டிப்பர் லாரிகளை இயக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கூறினர். ஆனால் பொதுமக்கள் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி வழியாக டிப்பர் லாரிகள் செல்லாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொரட்டகிரி கிராமத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்