குவாரி ஊழியர்கள் தாக்கியதில் லாரி டிரைவரின் மண்டை உடைந்தது: டிரைவர்கள் போராட்டம்

கரூர் அருகே மணல் கொண்டு செல்வதில் முன்னுரிமை பிரச்சினை ஏற்பட்டதால் குவாரி ஊழியர்கள் தாக்கியதில் லாரி டிரைவரின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கைக்கோரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-06 19:23 GMT

முன்னுரிமை பிரச்சினை

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் மணல்கள் அனைத்தும் மண்மங்கலம், நாவல்நகர், கணபதிபாளையம் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் இருப்பு வைத்து பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் நெரூர், மல்லாம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட மணல்கள் அனைத்தும் நாவல் நகர் மணல் குவாரிக்கு கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது.

இதையடுத்து நாவல் நகர் மணல் குவாரியில் மணல்அனைத்தையும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக ஏராளமான உள்ளூர் லாரிகள் மற்றும் வெளியூர் லாரிகள் வரிசை கட்டி நின்றன. அப்போது உள்ளூர் லாரி டிரைவர்களுக்கு முன்னுரிமை தராமல், ெவளியூர் லாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலதாமதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது உள்ளூர் லாரி டிரைவர் மணிவேல் என்பவர் ஏன் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறீர்கள் என மணல் குவாரி ஊழியர்களை ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

டிரைவர் மீது தாக்குதல்

இதனால் மணல் குவாரி ஊழியர்களுக்கும், உள்ளூர் லாரி டிரைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டாகி பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணல் குவாரி ஊழியர்கள் ரவி, ராஜா, அரவிந்த் ஆகியோர் சேர்ந்து லாரி டிரைவர் மணிவேலை தாக்கினர்.

இதில் மணிவேலின் மண்டை உடைந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் லாரி டிரைவர்கள் தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி மணல் குவாரி ஊழியர்கள் ரவி, ராஜா, அரவிந்த் ஆகிய 3 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டம்

இதற்கிடையில் தாக்குதல் நடத்திய மணல் குவாரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காயம் அடைந்த மணிவேலுக்கு நிவாரண தொகையும், மருத்துவ செலவையும் குவாரி நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து நேற்று காலை கரூர் மாவட்ட லாரிகள் சங்க தலைவர் செல்லராஜா தலைமையில் ஏராளமான லாரி டிரைவர்கள் நாவல் நகரில் உள்ள மணல் குவாரி முன்பு தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்