பொது வினியோகத்திட்டத்தில் 'கியூ ஆர் கோடு' வசதி; கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்
பொதுவினியோக திட்டத்தில் கியூஆர் கோடு வசதியை கலெக்டர் அருண்தம்புராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
பொது பேரவை கூட்டம்
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 103, 104 மற்றும் 105-வது பொது பேரவை கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் வங்கியின் உறுப்பினர் சங்கங்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்குதல், ஆண்டறிக்கை வாசித்து பதிவு செய்தல், கடலூர் மாவட்ட பொதுவினியோகத்திட்டத்தில் பேடிஎம் கியூ ஆர் கோடு வசதியை அறிமுகம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கு கடலூர் மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திலிப்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு, பொது வினியோகத்திட்டத்தில் பேடிஎம் கியூ ஆர் கோடு வசதியை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு பரிசு கூப்பன்
தொடர்ந்து வங்கியின் உறுப்பினர் சங்கங்களுக்கு பங்கு ஈவுத்தொகைக்கான காசோலை, கடலூர்-30, நெய்தல் புத்தக திருவிழாவில் வங்கியின் சார்பில் புத்தகங்கள் வாங்குவதற்கான ரூ.500 மதிப்புள்ள சிறப்பு பரிசு கூப்பன்களை வங்கியின் உறுப்பினர் சங்க பிரதிநிதிகள், வங்கி பணியாளர்களுக்கு வழங்கி, புத்தகங்கள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பான சேவை ஆற்றி வருவதை பாராட்டி, தூரிகை 2023 என்ற மாபெரும் ஓவியப்போட்டி நடத்தி அரும்புகள் என்ற பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதையும் கலெக்டர் பாராட்டினார்.
முன்னதாக கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். இதில் உதவி பொது மேலாளர் பலராமன், பொது மேலாளர் (பொறுப்பு) இளங்கோ, உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) அருள் உள்பட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொது மேலாளர் (வளர்ச்சி) மலர்விழி நன்றி கூறினார்.