புழலில் நர்சிங் கல்லூரி மாணவி மர்ம சாவு - விடுதி அறையில் பிணமாக கிடந்தார்

நர்சிங் கல்லூரி மாணவி, விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2023-02-03 08:45 GMT

சென்னையை அடுத்த புழல்-அம்பத்தூர் சாலையில் புழல் கேம்ப் அருகே தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பெண்கள்-ஆண்கள் என இரு பாலரும் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ(வயது 20) என்ற மாணவி, அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணவிகள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு தூங்கச்சென்று விட்டனர்.

நேற்று காலையில் சுபஸ்ரீ, வகுப்புக்கு வரவில்லை. இதனால் சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் சுபஸ்ரீ படுத்து இருந்தார். மாணவிகள் சத்தம் போட்டும் அவர் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுபஸ்ரீ மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சுபஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் மர்ம சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்