புதுப்பித்த சில மாதங்களிலேயே பெயர்ந்ததுஅறச்சலூர்-வெள்ளோடு ரோட்டில் திணறும் வாகன ஓட்டிகள்விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புதுப்பித்த சில மாதங்களிலேயே பெயர்ந்ததால் அறச்சலூர்-வெள்ளோடு ரோட்டில் வாகன ஓட்டிகள் திணறுகிறாா்கள்.

Update: 2023-05-11 21:31 GMT

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்களின் பெரிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி. குண்டும்-குழியுமாக, சேறும் சகதியுமாக பல முக்கிய ரோடுகள் இருந்தன. இன்னும் சில ரோடுகள் அந்த நிலையிலேயே பரிதாபகரமாக உள்ளன.

அறச்சலூர்- வெள்ளோடு ரோடு

ஒரு சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மூலம் போடப்பட்ட ரோடுகள் போடப்பட்ட சில மாதங்களிலேயே பெயர்ந்து மீண்டும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக அறச்சலூரில் இருந்து வெள்ளோடு செல்லும் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணி தொடங்கியது. அனுமன்பள்ளி வரை கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரோடு போடும் பணி முடிந்தது.

ஆனால் ரோடு போட்டு 2 மாதங்கள் முடியும் முன்பே ஆங்காங்கே தார் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் சாலையில் தினசரி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

வேகத்தடை போல...

இதுபற்றி அனுமன்பள்ளியை சேர்ந்த புகைப்பட கலைஞர் எம்.செல்வராஜ்:-

அறச்சலூரில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் வழியில் வாய்க்கால் மேடு, வேப்பம்பட்டி புதூர் பஸ் நிறுத்தம், இந்திரா நகர் உள்பட 6 இடங்களில் ரோடு மிகவும் கடுமையாக பழுதடைந்து உள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த பாதிப்பு தெரியாது. ரோடு மிகவும் நன்றாக இருப்பது போலவே இருக்கும். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் தார் பெயர்ந்து வேகத்தடைபோல காணப்படுகிறது.

இங்கு மோட்டார் சைக்கிளில் வருபவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வேகமாக வரும்போது பிரேக் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி, இந்த குழியில் இறக்கினால் வாகனம் விபத்துக்கு உள்ளாகி விடும்.

தினமும் பலர் இந்த சாலையில் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை மீண்டும் சீரமைத்து பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

தரம் இல்லை

வார்டு உறுப்பினர் தா.வே.விஜயானந்த்:-

ரோடுகள் தரமில்லாத நிலையில் இருப்பதால் விரைவில் உடைப்பு ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் இந்த வழியாக அதிகம் செல்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ப தரமான ரோடாக போடவில்லை. சாலையின் ஒரு பக்கம் முழுவதும் தாழ்வாக காணப்படுகிறது.

இது அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் காரணமாக ஏற்பட்டதாகும். எனவே சாலையை முழுமையாக தரமாக செப்பனிட வேண்டும்.

விபத்துகள்

கரும்புளியாம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி:-

அறச்சலூர் அருகே உள்ள வடபழனி பகுதியில் இருந்து ஜல்லி மற்றும் எம்-சாண்ட் ஏற்றிய வாகனங்கள் இந்த ரோட்டில் அதிக அளவில் செல்கின்றன. இந்த வாகனங்களின் எடை தாங்க முடியாத அளவுக்கு ரோடு இருக்கிறது. சாலையில் ஒரு முறை வாகனம் ஓட்டிப்பார்த்தால் ரோடு எந்த அளவுக்கு மேடு பள்ளமாக இருக்கிறது என்பது தெரியும்.

பல இடங்களில் பாரம் தாங்காமல் சாலை வெடித்துப்போய் கிடக்கிறது. இங்கு பேட்ச் ஒர்க் என்ற பெயரில் பராமரிப்பு வேலை செய்யப்பட்டாலும், மீண்டும் மீண்டும் குழி ஆகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

தெருவிளக்கு

குடுமியாம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன்:-

சாலையோரத்தில் மின் விளக்குகள் பல இடங்களில் இல்லை. தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் சரியாக ஒளிர்வது இல்லை.இதனால் இரவு நேரங்களில் சாலையில் உள்ள குண்டும், குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையை மீண்டும் செப்பனிடுவதுடன், தெருவிளக்குகள் சரியாக ஒளிர்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

திணறுகிறார்கள்

அனுமன்பள்ளியை சேர்ந்த தனபால்:-

அறச்சலூர் முதல் அனுமன்பள்ளி வரை புதிதாக சாலை போடப்பட்டும் அது பயனற்றதாகவே இருக்கிறது. சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே இப்படி பெயர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இந்த சாலையால் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க வேண்டும். மேலும் பள்ளத்துக்கடை பகுதியில் சாலையை ஒட்டி உள்ள பள்ளத்தில் குப்பைகளை போட்டு தீவைத்து எரிக்கிறார்கள். இதில் இருந்து எழும் புகையும் அந்த பகுதியில் விபத்துக்கு காரணமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்