அண்ணாமலையை முதல்-அமைச்சராக்க வற்புறுத்தியதால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகல்அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேச்சு
அண்ணாமலையை முதல்-அமைச்சராக்க வற்புறுத்தியதால்தான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதாக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்ெபேசினாா்
அண்ணாமலையை முதல்-அமைச்சராக்க வற்புறுத்தியதால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் பி.ஜி.முனியப்பன் (வடக்கு), எஸ்.மேகநாதன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பங்க் பாலு, பவானி ஒன்றிய செயலாளர்கள் தங்கவேலு, ஜெகதீசன், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாங்க முடியாது
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சின்ன பையன். என்னை விட 20 வயது குறைவு. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விட 30 வயது குறைவானவர். அவரது அரசியல் அனுபவம் கூட இவரது வயது கிடையாது.
ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரை மோசமாக விமர்சித்து பேசுகிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. குடும்ப தலைவியாக இருந்தாலும், குடும்ப தலைவருடன் சில கருத்து வேறுபாடு இருந்தால் ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியால் ஓரளவுக்குத்தான் இறங்கிச் செல்ல முடியும். அதற்கு மேல் தாங்க முடியாது.
அ.தி.மு.க. விலகல்
வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க. ஆதரவளிக்க வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணாமலையை முதல்-அமைச்சராக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.
பூத்தில் உட்காரக் கூட ஆட்கள் இல்லாத பா.ஜனதாவுக்கு 2½ கோடி உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. ஆதரவளிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இதனை ஏற்க முடியாததால் தான் பா.ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. இதற்கு தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கூறினார்.
இதில் தலைமை கழக செய்தி தொடர்பாளர் ஏ.எஸ்.மகேஸ்வரி, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சசி என்கிற இளங்கோ உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பிரதிநிதி ஆர்.ரமேஷ் வரவேற்று பேசினார். முடிவில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் கே.சின்னத்தம்பி நன்றி கூறினார்.