மகளுடன் மொபட்டில் சென்றபோது மூதாட்டியிடம் கைப்பை பறிப்பு

வேலூர் அருகே மகளுடன் மொபட்டில் சென்ற மூதாட்டியிடம் கைப்பையை பறித்தபோது அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

Update: 2023-10-21 18:12 GMT

வேலூர் அருகே மகளுடன் மொபட்டில் சென்ற மூதாட்டியிடம் கைப்பையை பறித்தபோது அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

கோவிலுக்கு..

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 33). இவரது தாயார் சாவித்திரி (62). இவர்கள் இருவரும் நேற்று அப்துல்லாபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு மொபட்டில் சென்றனர்.

மொபட்டை பிரியதர்ஷினி ஓட்டினார். சாவித்திரி பின்னால் அமர்ந்திருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்தனர்.

மேல்மொணவூர் மேம்பாலம் அருகே சென்றபோது அவர்களின் அருகே அந்த வாலிபர்கள், திடீரென சாவித்திரி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். சுதாரித்துக்கொண்ட சாவித்திரி கைப்பையை இறுக பிடித்திருந்தார்.

வாலிபர்கள் வேகமாக பிடித்து இழுத்தனர். அப்போது சாவித்திரி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பிச் சென்றனர்.

2 பேர் கைது

கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கருகம்புத்தூர், கொணவட்டத்தை சேர்ந்த 17, 18 வயதுடைய வாலிபர்கள் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்