ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Update: 2022-06-14 13:52 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ஸ்ட்ராபெரி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அப்போது தேயிலைக்கு மாற்றாக கொய்மலர் விவசாயம் செய்ய விவசாயிகள் களம் இறங்கினர்.

மேலும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொய்மலர் சாகுபடியில் போதிய லாபம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து குடில்களில் மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு வருகின்றனர். தற்போது ஸ்ட்ராபெரி பழங்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கொள்முதல் விலை உயா்வு

இதுகுறித்து தூனேரி கிராம விவசாயி பாபு கூறியதாவது:- ஸ்ட்ராபெரி நாற்றுகள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. குடில்களில் மாட்டு சாணம், தசகாவ்யம், பஞ்சகாவ்யம் ஆகிய இயற்கை உரங்களை கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் நாற்றுகள் பராமரிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாரானது. தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி ரூ.350 வரை விற்பனையாகிறது.

வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மராட்டியத்தில் நாற்று ஒன்றுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உரம், சொட்டு நீர் பாசனத்திற்கு என தனித்தனியாக மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே, ஸ்ட்ராபெரி விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்