ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.;
திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொள்முதல் செய்ய இலக்கு
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடப்பு ஆண்டு மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 550 டன் அளவுள்ள அரவை கொப்பரையானது கிலோ ஒன்றிற்கு ரூ.108.60 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கொள்முதல் இலக்கானது முழுவதுமாக நிறைவுற்று 339 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அடுத்தமாதம் 26-ந்ேததி வரை
அதனை தொடர்ந்து தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் இலக்கானது கூடுதலாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 100 டன், மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 100 டன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 150 டன் ஆக கூடுதல் 350 டன் உயர்த்தி நிர்ணயம் செய்ய்ப்பட்டுள்ளது. அதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வருகிற நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
வங்கி கணக்கில் நேரடியாக வரவு
மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம் அயல்பொருட்கள் (1 சதவீதம்), பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சில்லுகள் உடைபாடு 10 சதவீதம் (எடையில்), ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும்.
எனவே இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் விவசாயிகள் மேற்காணும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தங்களது நிலச்சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து முன் பதிவு செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கொள்முதலுக்கான கிரைய தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்
இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு கீழ்க்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.