சாலை அமைக்க பணம் கேட்டதாக ஆடியோ வெளியான விவகாரத்தால் கவுன்சிலருக்கு ஆதரவமாக பொதுமக்கள் திரண்டனர். மேலும் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடியோ விவகாரம்
திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் அங்கு இன்னும் சாக்கடை கால்வாய், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாநகரை சேர்ந்த ஒருவர், போயம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்று வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவில் தி.மு.க. நிர்வாகியிடம் பேசும் நபர், சாலை அமைப்பதற்கு மாநகராட்சியில் பணம் இல்லை. எனவே ரூ.25 ஆயிரம் கொடுத்தால் சாலை அமைக்கப்படும் என்று 8-வது வார்டு கவுன்சிலர் வேலம்மாளின் கணவர் வி.வி.ஜி.காந்தி கூறுவதாக தெரிவித்தார். இந்த ஆடியோ தி.மு.க. வட்டாரம் மட்டுமின்றி, பொதுமக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் கூறிய தகவலை கவுன்சிலரின் கணவர் வி.வி.ஜி.காந்தி முற்றிலுமாக மறுத்தார். மேலும் அப்பகுதி மக்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த ஆடியோ வெளியான நாளில் இருந்து அதில் பேசிய நபர் திடீரென மாயமானார். இந்த நிலையில் அவர் ராஜாநகரில் உள்ள வீட்டில் இருப்பதாக அப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவுன்சிலர் வேலம்மாள் காந்தியுடன் சென்று அந்த நபரிடம் பேசினார்கள்.
அப்போது அவர், செல்போனில் தன்னிடம் பேசிய தி.மு.க. நிர்வாகிதான் கவுன்சிலர் பணம் கேட்டதாக கூறுமாறு என்னிடம் தெரிவித்தார் என்றும், அதனால்தான் நான் அப்படி பேசினேன் என்றும் கூறினார்.
சாலைமறியலுக்கு முயன்றனர்
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த தி.மு.க. நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.