அறிவியல்பூர்வ சாட்சிகளை கையில் எடுத்து தண்டனை: அதிகாரம் படைத்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து பிறழ்சாட்சியாக மாறுவதா? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
அதிகாரம் படைத்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து பிறழ்சாட்சியாக மாறுவதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்ததுடன், அறிவியல்பூர்வ சாட்சிகளை கையில் எடுத்து கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனை பற்றியும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரம் படைத்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து பிறழ்சாட்சியாக மாறுவதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்ததுடன், அறிவியல்பூர்வ சாட்சிகளை கையில் எடுத்து கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனை பற்றியும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாலியல் வழக்கில் தண்டனை
தஞ்சையை சேர்ந்த சிறுமி ஒருவரை 2018-ம் ஆண்டில் ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரின்பேரில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 பேர் கைதானார்கள். இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
முடிவில், இந்த வழக்கில் இருந்து 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இளவரசன், கார்த்திக் ஆகியோருக்கு தலா ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை. இதனால் அவர்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
டி.என்.ஏ. பரிசோதனை
அரசு தரப்பில் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவின் காரணமாக 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையிலும் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. டி.என்.ஏ. பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அறிவியல்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களை மனுதாரர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
பிறழ்சாட்சிகள்
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அதிகாரம் படைத்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினர்கூட பிறழ்சாட்சிகளாக மாறும் கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணமாக இந்த வழக்கு அமைந்துள்ளது.
இந்த வழக்கின் சாட்சிகள் கோர்ட்டில் அளித்த சாட்சியமானது, போலீசில் தாங்கள் அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக இருந்தபோதும், கீழ்கோர்ட்டு சற்றும் தாமதிக்காமல் அறிவியல்பூர்வ சாட்சிகளை கையில் எடுத்திருக்கிறது.
உண்மையாகவே இந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றால், எதற்காக புகார் கொடுக்கப்பட்டது?
பாதிக்கப்பட்ட சிறுமியையும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் டாக்டர்கள் பரிசோதித்து, மாதிரி எடுத்து ஏன் அறிக்கை கொடுத்தார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன.
தண்டனை உறுதி
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மேல்முறையீட்டாளர்களால் முழுமையாக எதிர்க்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு கீழ்கோர்ட்டு அளித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.