சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை

விழுப்புரம் அருகே ஓடும் அரசு பஸ்சில் சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.;

Update: 2023-08-23 18:45 GMT

வளவனூர்

பொதுமக்கள் புகார்

விழுப்புரத்தில் இருந்து சேர்ந்தனூர் மார்க்கமாக செல்லும் அரசு பஸ்சில் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து சாகச பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று மாலை விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் விழுப்புரம்-சேர்ந்தனூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து சேர்ந்தனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டும், பக்கவாட்டு ஜன்னலில் நின்று மேற்கூரையை பிடித்துக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வந்தனர்.

பஸ்சை மறித்தனர்

இதைப்பார்த்த போலீசார் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் பஸ் படிக்கட்டு, பக்கவாட்டு ஜன்னலில் நின்று பயணம்செய்த மாணவர்களை கீழே இறக்கிவிட்டு அந்த பஸ்சை அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த மாணவர்கள் சேர்ந்தனூரை சேர்ந்தவர்கள் என்பதும், விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் இவர்கள் நேற்று வகுப்புகள் முடிந்ததும் அரசு பஸ்சில் வீட்டுக்கு செல்லும்போது பஸ்சில் சாகச பயணம் மேற்கொண்டதும் தெரியவந்தது.

நூதன தண்டனை

இதையடுத்து சாகச பயணம் மேற்கொண்ட மாணவர்களிடம் இனிமேல் பஸ்சின் படிக்கட்டில் சாகச பயணம் மேற்கொள்ள மாட்டோம்" என்ற உறுதிமொழியை ஏற்க வைத்து உறுதிமொழியை 100 முறை எழுதி தரும்படி நூதன தண்டனையை போலீசார் வழங்கினர். அதன்பேரில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் அதை 100 முறை எழுதியும் கொடுத்தனர்.

பின்னர் அவர்களுக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அந்த வழியாக வந்த வேறொரு அரசு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்