நாகர்கோவிலில் சுவரில் துளையிட்டு பலசரக்கு கடையில் கொள்ளை
நாகர்கோவிலில் சுவரில் துளையிட்டு பலசரக்கு கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் சுவரில் துளையிட்டு பலசரக்கு கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பலசரக்கு கடையில் திருட்டு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதிைய சேர்ந்தவர் ஜான் செல்வன் (வயது 58). இவர் பார்வதிபுரத்தில் இருந்து அழகம்பாறை செல்லும் சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் ஜான் செல்வன் கடையை திறக்க வந்தார்.
அதன்படி கடையின் ஷட்டரை திறந்து பார்த்து உள்ளே சென்றார். அங்கு மேஜையில் இருந்த பணம் மற்றும் சில பலசரக்கு பொருட்களை காணவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவர் பூட்டிய கடைக்குள் மர்மநபர்கள் நுழைந்தது எப்படி? என கடையை சுற்றி பார்த்தார்.
அப்போது கடையின் பின்பக்க சுவரில் பெரிய துளை போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக புகுந்து தான் மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர் இதுகுறித்து உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சுவாில் துளையிட்டது எப்படி?
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பலசரக்கு கடையின் அருகே உள்ள ஒரு வெல்டிங் கடையிலும் திருட்டு போனது தெரியவந்தது. அதாவது அங்கிருந்த குத்து விளக்கை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.
பின்னர் போலீசார் கடையில் இருந்து சிறிது தொலைவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குத்து விளக்கு ஒன்று கிடந்தது. அதுவெல்டிங் கடையில் திருடிய குத்துவிளக்கு என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வெல்டிங் கடையில் இருந்த எந்திரத்தையும் காணவில்லை.
இந்த சம்பவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மர்மநபர்கள் முதலில் வெல்டிங் கடைக்குள் புகுந்து எந்திரத்தை திருடியுள்ளனர். பின்னர் அந்த எந்திரம் மூலம் பலசரக்கு கடையின் பின்புற சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
குத்துவிளக்கை வீசி சென்றது ஏன்?
பின்னர் திரும்பி சென்ற போது குத்துவிளக்கை வீசி விட்டு சென்றுள்ளனர். போதிய பணம் கிடைக்காத ஆத்திரத்தில் மர்மநபர்கள் குத்துவிளக்கை வீசி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடையில் இருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பருப்பு, அரிசி, சிகரெட் பாக்கெட்டுகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி துப்பு துலக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர்களின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். சுவரில் துளையிட்டு பலசரக்கு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.