பஞ்சர் ஒட்டும் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடியில் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-19 12:24 GMT

தூத்துக்குடியில் தொழில் போட்டியில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை

சாத்தான்குளம் வேலன்புதுக்குளத்தை சேர்ந்தவர் ராம். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 47). இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர் இரவில் கடையில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்து கடையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தாராம். நேற்று காலையில் பார்த்த போது, அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்தீஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொழில் போட்டி

விசாரணையில், கருப்பசாமியை தூத்துக்குடியை சேர்ந்த செல்லக்குட்டி (வயது 27) என்பவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்லக்குடி, இறந்த கருப்பசாமியின் கடைக்கு எதிரே பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக செல்லக்குட்டி, கருப்பசாமியை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் செல்லக்குட்டியை நேற்று கைது செய்தனர். இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. இறந்த கருப்பசாமிக்கு சங்கரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்