நத்தக்காடையூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் குறைந்த ஏக்கர் பரப்பளவிலும், சிக்கன நீர் நிர்வாகத்திலும் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

நத்தக்காடையூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் குறைந்த ஏக்கர் பரப்பளவிலும், சிக்கன நீர் நிர்வாகத்திலும் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-03 10:41 GMT

முத்தூர்

நத்தக்காடையூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் குறைந்த ஏக்கர் பரப்பளவிலும், சிக்கன நீர் நிர்வாகத்திலும் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

கீழ்பவானி பாசன பகுதிகள்

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் நகரம் மற்றும் பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தொடர், முறை தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர் ஆகியவற்றினை பயன்படுத்தி தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், கீரை வகைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பழ வகை பயிர்களையும் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.

சாம்பல் பூசணிக்காய் சாகுபடி

இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் அக்னி மழையை எதிர்பார்த்து குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூலுடன் கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி தற்போது ஆர்வமாக செய்து உள்ளனர். இதன்படி இப்பகுதி காய்கறி உற்பத்தி விவசாயிகள் தங்களது வயல்களில் சுமார் ½ ஏக்கர் முதல் 2 ஏக்கர் பரப்பளவு வரை ஆங்காங்கே பரவலாக சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்து உள்ளனர்.

இதன்படி 1 ஏக்கர் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார் கட்டுதல், அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர். இதன்படி தற்போது சாம்பல் பூசணிக்காய் செடிகள் தற்போது கொடிகளாக நீண்டு நன்கு வளர்ந்து வயல்களில் படர்ந்து பச்சை பசேலென்று பசுங்கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளிக்கின்றன.

அயல் மகரந்த சேர்க்கை

இந்த சாம்பல் பூசணிக்காய் செடிகளில் பூக்கள் தற்போது இள மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து உள்ளன, இந்த மாயாஜால நிற பூக்கள் அயல் மகரந்த சேர்க்கை மூலம் சாம்பல் பூசணிக்காய் பிஞ்சுகளாக விரைவில் உருமாறி சுமார் 3 கிலோ முதல் 12 கிலோ வரை பெரிய பூசணிக்காய் அளவாக மாற உள்ளன. இதுபற்றி சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:

பொதுவாக சாம்பல் பூசணிக்காய் கோடை காலத்தில் சாகுபடி செய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. மேலும் இந்த சாம்பல் பூசணிக்காய் குறைந்த நீர் நிர்வாகத்தில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விரைவில் பெய்ய உள்ள அக்னி நட்சத்திர வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த சாம்பல் பூசணிக்காய் செடிகள் வயல்களில் கொடிகளாக நன்கு வளர்ந்து படர்ந்து உள்ளன.

இதன்படி தற்போது சாம்பல் பூசணிக்காய் செடிகளில் பூத்துள்ள பூக்கள் விரைவில் பிஞ்சு பூசணிக்காய்களாக மாறி பின்னர் பெரிய பூசணிக்காய்களாக மாறி விடும். அப்போது இதனை அறுவடை செய்து மொத்தமாக நத்தக்காடையூர், வடபழனி, அரச்சலூர், முத்தூர், காங்கயம், வெள்ளகோவில், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி விற்பனை கடைகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு எடைக்கு ஏற்ப மொத்தமாகவும் அன்றைய நாளுக்கு ஏற்ப உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடுவோம்.

கோவில் திருவிழாக்கள்

மேலும் இந்த சாம்பல் பூசணிக்காய் அறுவடை நாட்களில் மொத்தம் 110 நாட்களுக்கு கூடுதல் பலன் தரக்கூடியது ஆகும். இந்த சாம்பல் பூசணிக்காய் உணவு பண்டம் வகையை சார்ந்தது ஆகும். இந்த சாம்பல் பூசணிக்காயில் இருந்து அல்வா உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் திருமணம், பூப்பு நன்னீராட்டு விழா, கோவில் கும்பாபிஷேகம், பொங்கல் திருவிழா உட்பட பல்வேறு பெரிய விசேஷ நிகழ்வுகளில் மோர் குழம்பு பயன்பாட்டிற்கும் மற்றும் வர்த்தகர்கள் கடைக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முன்பு உடைப்பதற்கு திருஷ்டி பூசணிக்காய் பயன்பாட்டிற்கும் உகந்தது ஆகும். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சாம்பல் பூசணிக்காய் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் மொத்த கொள்முதல் விலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போதைய மே மாத சுட்டெரிக்கும் கோடை வெயில் சீதோசன நிலையிலும் வேளாண் சாகுபடியில் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் பலன் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

---

Tags:    

மேலும் செய்திகள்